ஊரக பகுதிகளில் பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களை இடிக்க 17 வகையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் தாரேஸ் அகமது, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் இதர பயன்பாட்டில் உள்ள பழைய கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழைய கட்டடங்களை இடிக்கும் பணியை இந்திய தர நிர்ணய அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும். கட்டடங்களை இடிப்பதற்கு முன் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் போன்ற 17 பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
இடிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு போன்ற விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பழைய கட்டடத்தை இடிக்கும்போது அங்குள்ள பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதி செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.