இன்று, தலைநகர் டெல்லியில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115.5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு பின்னர், 19 கிலோ எடை உடைய வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் 1744 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னதாக, இது 1859.5 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கொல்கத்தாவில் 1846 ரூபாய்க்கும், மும்பையில் 1696 ரூபாய்க்கும், சென்னையில் 1893 ரூபாய்க்கும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விற்கப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்கப்படும் வீட்டு உபயோக அல்லது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இதற்கான மானியமும் கொடுக்கப்பட்டு வருகிறது. சுமார் 14.2 கிலோ எடை உடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1053 ரூபாயில் தொடங்கி டெல்லியில் விற்பனை ஆகிறது. இந்தத் தகவல்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தனது அதிகாரப்பூர்வ வலை பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி, தற்போது வரை 7 முறை வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் தொடங்கி, தற்போது வரை, சிலிண்டர் விலையில் 610 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எரிவாயு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் உணவு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும் என நம்பப்படுகிறது.