நவம்பர் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்வு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். கடந்த 25ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற்றது. இதுவே, இந்தாண்டின் கடைசி சூரிய கிரகணமாகும்.
இந்நிலையில், நவம்பர் மாதம் 8ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 3.46 மணிக்கு இது முடிகிறது. இந்தியாவில் கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, நாக்பூர் உள்பட பல நகரங்களில் இதை பார்க்க முடியும். இந்தியாவின் பிற பகுதிகளில் பகுதி நேர சந்திர கிரகணம் மாலை 6.19 மணி வரை தெரியும்.
இந்த கிரகணத்தை காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கண்ணாடியோ தேவையில்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால், அதை வெறும் கண்ணால் பார்க்கலாம். இதற்கு அடுத்து, அடுத்தாண்டு அக்டோபர் 28ம் தேதி தான் மீண்டும் முழு சந்திர கிரகணத்தை காண முடியும்.