இந்தியாவில் பங்குச் சந்தை நிலவரம் ஏற்றத்தில் இருந்தாலும், ஃபேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் நைக்கா நிறுவனம் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று, நிறுவனத்தின் பங்கு விலை 7% சரிந்துள்ளது. மேலும், வரலாற்றில் முதல் முறையாக, 1000 ரூபாய் இலக்கை விட குறைந்து, ஒரு பங்கு விலை இன்று 975.5 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. கடந்த வருடம் நவம்பர் 10ஆம் தேதி, நிறுவனத்தின் பங்குகள் 2574 ரூபாய்க்கு வர்த்தகமாயின. அதனுடன் ஒப்பிடுகையில், இன்று 62% சரிவை நிறுவனம் சந்தித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் சந்தை மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மெட்டா நிறுவனம் 24 சதவீதமும், அமேசான் 20 சதவீதமும் சரிவை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், நைக்கா நிறுவனமும் இணைந்துள்ளது. இதுகுறித்து மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. அதில், “பொது பங்கீட்டுக்கு வந்தவுடன் நைக்கா நிறுவனத்தின் பங்குகள் உச்சத்திற்கு சென்றன. ஆனால், அதைத் தொடர்ந்து நிறுவனத்தின் செயல்பாடுகளில் சரிவு காணப்பட்டதால், பங்கு மதிப்பும் தொடர் சரிவை சந்தித்துள்ளது. எனினும், பல நாட்கள் கழித்து, நிறுவனம் மீண்டும் உயர்வை அடையும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பங்குச் சந்தை சார்ந்த பல மதிப்பீட்டு நிறுவனங்களும் நைக்கா நிறுவனத்தின் சரிவு குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளன. பெரும்பாலும், தற்போது நிறுவனம் சரிவை சந்தித்தாலும், நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குச் சந்தை வல்லுநர்கள், இந்த நிறுவனத்தின் பங்குகளை தற்சமயத்தில் வாங்குவது குறித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.