இந்தியாவைச் சேர்ந்த அழகு மற்றும் ஃபேஷன் வணிக நிறுவனமான நைக்கா (Nykaa), மேற்கு ஆசியாவின் மாபெரும் ஃபேஷன் வணிகக் குழுமமான அப்பரல் (Apparel) உடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் வணிகத்தை விரிவாக்க, நைக்கா திட்டமிட்டுள்ளது. இந்த வணிக ஒப்பந்தத்தின்படி, மேற்காசியாவில் விற்கப்படும் அழகு சாதனப் பொருட்களில், 55% பங்குகள் நைக்காவிற்கும் 45% பங்குகள் அப்பரல் நிறுவனத்திற்கும் சொந்தமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக ஒப்பந்தம், மார்ச் 31, 2023 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் வணிக மதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து பேசிய நைக்கா நிறுவனத்தின் தலைவர் பால்குனி நாயர், “ பெரிய முதலீடுகளை நாங்கள் முக்கியமாக கருதவில்லை. எங்களது சந்தையை விரிவு படுத்துவதே குறிக்கோள். அதற்காகவே இந்த ஒப்பந்தம்” என்று கூறியுள்ளார்.
நைக்கா நிறுவனத்திற்கு சொந்தமாக இந்தியாவில் 112 கடைகள் இயக்கப்படுகின்றன. தற்போது, அப்பரல் நிறுவனத்துடன் ஆன ஒப்பந்தத்தின் மூலம், சுமார் 14 நாடுகளில், 2000க்கும் மேற்பட்ட கடைகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து பேசிய அப்பரல் குழுமத்தின் தலைவர் சீமா வேட், "நைக்கா நிறுவனத்துடன் ஆன இந்த வணிகக் கூட்டுறவு, எங்களது வணிகச் சந்தையை மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.