பசுமை இல்ல வாயுக்களால் கடல் பகுதியில் மிகப்பெரிய அளவிலான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் தளத்தில் இது தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கு கீழே, ‘நமது கடல்கள் மாற்றம் அடைகின்றன’ என்ற கேப்ஷனை நாசா பதிவிட்டுள்ளது.
பூமியின் தட்பவெப்ப நிலையை கட்டுக்குள் வைத்திருப்பதில் கடல் பகுதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், உயர்ந்து வரும் பசுமை இல்ல வாயுக்கள் கடலின் சமநிலையை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. நாசா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் வெவ்வேறு வண்ணங்களில் கடல் பகுதியின் வெப்பநிலை காட்டப்பட்டுள்ளது. பச்சை மற்றும் நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள இடங்களை காட்டிலும், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களில் காட்டப்பட்டுள்ள இடங்களில் வெப்பநிலை உயர்வாக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.