கடந்த பிப்ரவரி 3ம் தேதி, அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில், வினைல் குளோரைடு, பியூட்டைல் அக்ரி லைட் ஆகிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள் திரவ நிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ரயில் விபத்து நேர்ந்த போது, பேரல்களில் இருந்த இந்த ரசாயனங்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலந்தன. மேலும், நச்சு வாயுக்கள் வெளியே கசிந்து, தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கட்டுக்கடங்காத வகையில், விண்ணை மட்டும் அளவில் கரும்புகை எழும்பியது. விபத்து ஏற்பட்டு 2 வாரங்கள் கடந்த பின்னும், மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. விபத்து தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, இது செர்னோபில் அணு உலை விபத்தை நினைவு படுத்துவதாக உள்ளது என்று பேசப்பட்டது.
இந்நிலையில், அரசு அதிகாரிகள், இந்த விபத்தால் நேர்ந்த விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட அடுத்த சில தினங்களில் நீர்நிலைகளில் இருந்த உயிரினங்கள் பலியாகத் தொடங்கியது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், வாயுக்கள் தீப்பிடித்து எறிந்ததால் காற்று மாசு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சொல்லப்பட்டதால், அதிகாரிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். பிப்ரவரி 17ஆம் தேதி அன்று, காற்று தரம் படிப்படியாக பாதுகாப்பான நிலைக்கு முன்னேறி வந்திருப்பதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான நீர் தற்போது மீண்டும் பாதுகாப்பு நிலைக்கு வந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நீண்ட கால அடிப்படையில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், “விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை தற்போதைய நிலையில் முழுமையாகக் கணிக்க முடியாது. மேலும், ஆபத்து முழுமையாக நீங்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.