ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் திங்களன்று 6.85% உயர்ந்து ரூ.93.41 ஆக வர்த்தகமாகியது. இதற்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், 2024 டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தற்போதுள்ள 800 சில்லறை விற்பனை நிலையங்களை 4000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததுதான்.
கடந்த நவம்பர் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை 33% சரிந்துள்ளது. இருந்தபோதிலும், இந்திய மின் வாகன சந்தையில் ஓலா நிறுவனம் 37% சந்தைப் பங்கை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை 392,176 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு நிதி அறிக்கையின்படி, நிகர இழப்பு ரூ.495 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயம், வருவாய் 39% அதிகரித்து ரூ.1,214 கோடியாக உள்ளது. இருப்பினும், கடந்த மூன்று மாதங்களில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் 27% சரிந்துள்ளது. தற்போது நிறுவனத்தின் மதிப்பு ரூ.38,559 கோடியாக உள்ளது.