உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.238.41 கோடி செலவில் 5,635 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்த மாநில இளைஞர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மண்டலங்களாக நான்கு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும் என்று 24.01.2022 சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தேன்.
அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், திருச்சியில் அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, அறிவு திறன், தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல தமிழகம் உலகத்தோடு போட்டியிட விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும் துணையாக இருக்கும் என்று பேசினார்.














