ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணியர் புகார் கூறினர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கடந்த 27ம் தேதி பேச்சு நடத்தினர். கூட்டத்தில் கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தினர்.
அதன்படி, நேரம், துாரம் மற்றும் பேருந்துகளின் தரம் அடிப்படையில் 10 முதல் 22 சதவீதம் வரை குறைத்து திருத்தப்பட்ட கட்டணத்தை தமிழக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை வெளியிட்டனர். இந்த பட்டியலில் உள்ளதைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குரவத்து துறை எச்சரித்துள்ளது. இதேபோல, மற்ற ஊர்களுக்கும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கும் கட்டண குறைக்கப்பட்டுள்ளது.