ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். மேலும், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலவசங்கள் அளிப்பது தொடர்பாக தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கும் கட்சிகள், அதற்கான நிதி எப்படி திரட்டப்படும் என்ற திட்டத்தையும் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து சில தினங்களுக்கு முன் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதற்கு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் புதிய அதிரடி பரிந்துரையை அனுப்பி உள்ளது. அதில், தேர்தலின்போது ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏற்ப மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மாற்ற வேண்டும்.
ஒரே வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதால் அதிக செலவு ஏற்படுகிறது. மேலும், ஒரு தொகுதியின் பதவியை அவர் ராஜினாமா செய்யும்போது அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.