இணையவழி சூதாட்டங்களை தடைசெய்யும் சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இணைய விளையாட்டுகளில் சில நமது திறமையை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. ஆனால் மொத்தமாக தடை செய்தால் அரசியலமைப்புச் சட்டக் கூறு 19 (1) (g)-க்கு எதிரானது போலாகும் என தமிழக ஆளுநர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. இந்த சட்ட மசோதாவில் விளையாட்டுகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன.
முன்பு அரசால் சட்டம் பிறப்பிக்கப்பட்டு சில காரணங்களால் சென்னை உயா் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதா, அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டு இருக்கிறது. அதேசமயம் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல், தடை விதித்தல் போன்றவற்றில் முன்னோடியாக இ௫ப்பதை வெளிப்படுத்தவும் இது உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்ததற்கான அவசர சட்டம் வரும் 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மசோதாவுக்கு ஆளுனர் தாமதம் இல்லாமல் அனுமதி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது தமிழக அரசு.














