தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதுதொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இந்த சட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாத வகையில் உருவாக்கவேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது.
எனவேதான் அதற்கேற்ற வகையில், தற்போது விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில், அதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படும். பின்னர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.