இந்த ஆண்டு பண்டிகை காலத்தில், 'ஆன்லைன்' வாயிலாக 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ல் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் வரிசையாக அணிவகுத்து வருகின்றன. இந்த பண்டிகை காலத்தில் ஜவுளி, நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். சமீபகாலமாக மக்கள் ஆன்லைனில் வாங்குவதை மிகவும் விரும்புகின்றனர்.
இதனால், ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்த 'ரெட்சீர்' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, அக்டோபர் முதல் வாரத்திலேயே ஆன்லைன் விற்பனை சூடு பிடிக்கும். 'கடந்த ஆண்டுகளை விட, இந்த ஆண்டு 96 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளது.