ஊட்டியில் ஆண்டு தோறும் நடைபெறும் மலர்கண்காட்சி தற்போது இரண்டாவது சீசனுக்கு தயாராகி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் இரண்டாவது சீசன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும். அதனை முன்னிட்டு தீவிரமாக அங்கு கண்காட்சிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பூங்காவில் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை உட்பட பல நிறங்களின் 15000 மலர் தொட்டிகள் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இதனை சிறப்பிக்கும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 வகையான மலர் விதைகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட உள்ளன. ஊட்டியில் ஏற்கனவே 4 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிய மலர்கள் நடவு செய்யப்பட உள்ளன.தமிழகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறைகள் வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.இதற்கிடையில் புல்வெளி மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் அனுமதிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.