சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளை உள்ளடக்கிய ஓபெக் கூட்டமைப்பு (Opec+), அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாள் ஒன்றுக்கு, 2 மில்லியன் பேரல் அளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, எண்ணெய் விலைகள் சரிந்துள்ளன. அதனை ஈடுகட்டவே உற்பத்தியை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று ஓபெக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு பின்னர், உற்பத்தியில் இத்தகைய பெரும் சரிவு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால், பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை, இந்த திட்டம் மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.
ஓபெக் கூட்டமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாயின. இதனால், இந்த வாரத்தின் தொடக்கம் முதலே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2% அதிகரித்து, 93 அமெரிக்க டாலர்களுக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. ஓபெக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனை வெள்ளை மாளிகை அறிக்கை உறுதி செய்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. எரிபொருள் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் பணத்தை உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யா பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி துறை அமைச்சர் சுஹைல் அல் மசூரி, “கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் திட்டம், முழுக்க முழுக்க தொழில்நுட்ப ரீதியிலானது; அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.