வருவாய்த் துறை சார்பில் ரூ.19.84 கோடி மதிப்பிலான கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வருவாய்த் துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. செங்கல்பட்டில் ரூ.1.15 கோடியில் மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடம், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ரூ.54.95 லட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
மேலும் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தலா ரூ.2.79 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ரூ.3.83 கோடியிலும், சாத்தான்குளத்தில் ரூ.3.07 கோடியிலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ரூ.3.07 கோடியிலும், திருச்சிராப்பள்ளியில் ரூ.2.59 கோடியிலும் வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.19.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.