தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வந்தது. இதில் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்த போதிலும் வட மாவட்டங்களில் போதுமான அளவு மழைப்பொழிவு ஏற்படவில்லை. தற்போது வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.இதில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 27ஆம் தேதி வரை லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று பல இடங்களில் கன மழை வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவைகாரைக்கால் பகுதிகளிலும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.