தமிழ்நாட்டில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகளை இப்போதே தொடங்கி இருக்கிறது. அதன்படி, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருகிற 2-வது வாரத்தில் இருந்து மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பையும் விட்டுவிடாமல் வீடுவாரியாக சென்று கணக்கெடுக்கவும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச்சரியாக பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த மாணவ-மாணவிகளின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
'