அமெரிக்காவில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மணி நேரத்திற்கு விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. விமான ஓட்டிகளுக்கு அறிவிப்பை வெளியிடும் ‘நோட்டீஸ் டு ஏர் மிஷன்’ என்ற அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாகவே, விமானம் சென்று கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள எரிமலை வெடிப்பு, பறவைகள் நடமாட்டம், விமான கண்காட்சிகள், பாராசூட் சாகசம், பட்டம் திருவிழா, லேசர் நிகழ்ச்சி, ராக்கெட் சோதனை, போர் பயிற்சி, உயரமான கட்டிடங்களில் விளக்குகள் எரியாமல் இருப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் விமானிகளுக்கு தெரிவிக்கப்படும். எனவே, பாதுகாப்பு கருதி, விமான போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க பொது விமான போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான எஃப்ஏஏ உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் சுமார் 21,000 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் வெளிநாடுகளுக்கு புறப்படுவதாக இருந்த 1840 விமானங்கள் அடங்கும்.
இந்நிலையில், இது அமெரிக்கா மீதான சைபர் தாக்குதலாக இருக்கும் என்று வதந்திகள் பரவின. ஆனால், அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. அதன் பின்னர், பல மணி நேர சீரமைப்புகளைத் தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, தற்போது, விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.