ஓயோ நிறுவனம் முதல் முறையாக தனது லாபகரமான நிதி ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் 100 கோடி ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா மட்டும் இன்றி, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 8 காலாண்டுகளாக ஓயோ நிறுவனத்தின் எபிட்டா நேர்மறையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஓயோ நிறுவனத்தின் ரொக்கப் பண இருப்பு 1000 கோடி ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. உலகளாவிய முறையில் ஓயோ நிறுவனம் தொடர் முன்னேற்றங்களை சந்திக்கும் என்று ரித்தேஷ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த நிதி ஆண்டில், 5000 ஓட்டல்கள் 6000 வீடுகள் ஆகியவை ஓயோ நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓயோ நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 888 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.