இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுக்கான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தொழிலதிபர்கள் அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீபிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளதால் அவர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரியை 200 சதவீதம் இந்தியா உயர்த்தியது. இதனால் இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதையடுத்து இந்தியாவுடன் வர்த்தக உறவை முற்றிலுமாக பாகிஸ்தான் முடித்துக் கொண்டது.
தற்போது அந்த நாடு கடனில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவுடன் தடைபட்ட வர்த்தக உறவை மீண்டும் தொடர பாகிஸ்தான் தீவிரமாக யோசித்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முகமது ஐசக் தார் முன்பு கூறினார். எனினும் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்று இந்தியா கூறியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் கராச்சியில் முன்னணி தொழில் அதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தொழிலதிபர்கள் தரப்பில் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.