பாகிஸ்தானில் அரசு அனுமதி இல்லாமல் தங்கி உள்ள 17 லட்சம் ஆப்கன் அகதிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே உள்ள எல்லைப் பகுதியில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அகதிகள் தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கி உள்ள ஆப்கன் அகதிகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. தற்போது உரிய ஆவணங்கள் இன்றி சுமார் 17 லட்சம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மத நிகழ்ச்சியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 52 பேர் பலியாகினர். இது போன்ற தாக்குதல்களை நடத்தும் பயங்கரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.