பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாக, அங்கு எரிவாயு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, “24 மணி நேரமும் தடையின்றி எரிவாயுவை விநியோகம் செய்வதற்கு சாத்தியம் இல்லை. மேலும், பணக்காரர்கள் எரிவாயுவுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று பாகிஸ்தான் நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் முஸ்தாக் மாலிக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எரிவாயு கையிருப்பை சமநிலைப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. இதன் மூலம், பணக்காரர்களுக்கு ஒரு விலையிலும் ஏழைகளுக்கு சலுகை விலையிலும் சமையல் எரிவாயு வழங்கப்படும். மேலும், ரமலான் மாதம் என்பதால், அதிகாலை மற்றும் மாலை வேளைகளில், நோன்பு துறப்பவர்களுக்கு உதவும் வகையில், அந்த நேரங்களில் சமையல் எரிவாயு தங்கு தடை இன்றி வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். ஆனால், அவரது இந்த அறிவிப்புக்கு தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.