எதிர்க்கட்சி வரிசையில் அமர இம்ரான் கான் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த வியாழனன்று பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. என்றபோதிலும், எதிர்க்கட்சி வரிசையில் அமர இம்ரான் கான் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் கோஹர் அலி கான் கூறுகையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடனும் எங்களுக்கு கொள்கை வேறுபாடு உள்ளது. எனவே எந்த கட்சியுடனும் இணைந்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை. அதைவிட நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். பிடிஐ கட்சி ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக செயல்படும். இக்கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் வாசிம் காதிர் நவாஸ் ஷெரிப் கட்சியில் இணைவிருப்பதாக தகவல் வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரை தவிர பிடிஐ ஆதரவுடன் வெற்றி பெற்ற அனைத்து சுயேச்சைகளும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். கைபர் பத்துன்கவா மாகாணத்தில் ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சித் தலைவர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
இம்ரான் கான் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 101 இடங்கள் கிடைத்துள்ளது. இருந்த போதிலும் 336 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 179 இடங்கள் தேவை. எனவே புதிய அரசை அமைக்க 68 இடங்கள் இன்னும் தேவை. பாகிஸ்தானை பொறுத்தவரை 266 இடங்களில் மட்டுமே நேரடி போட்டி நடைபெறும். 60 இடங்கள் மகளிருக்கும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். 266 தொகுதிகளில் கிடைத்த இடங்களின் அடிப்படையில் இந்த 70 இடங்கள் ஒதுக்கப்படும். எனவே பிடிஐ கட்சி நேரடியாக போட்டியிடாததால் அதற்கு நியமன இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படாது. இந்நிலையில், பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்காமல் எதிர்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது. இப்போது அங்கு நவாஸ் ஷெரிப் கட்சி கூட்டணி அரசு அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.