கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் சூழல் இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். அண்மையில் 'நெவர் கிவ் அன் இன்ச்: ஃபைட்டிங் ஃபார் தி அமெரிக்க ஐ லவ்' என்ற பெயரில் வெளியான புத்தகத்தில் இவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்த தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ளதாவது: "நான் வியட்நாமின் ஹனோய் நகரில் இருந்த போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அணு ஆயுதப் போருக்கு நெருங்கின. இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு எந்த அளவிற்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது. 2019ல், பாகிஸ்தானின் தளர்வான பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை காரணமாக, 40 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தானுக்குள் சென்று எதிர் தாக்குதல் நடத்தியது. அப்போது, பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதில், இந்திய விமானி ஒருவர் பிடிபட்டார். அப்போது நான் உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சரிடம் பேசினேன். அவர், 'பாகிஸ்தான் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது' என்று கூறினார். அவரை நான் சற்று பொறுமையாக காத்திருக்க சொல்லி, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியிடம் பேசினேன். அவர் தரப்பிலிருந்து, பாகிஸ்தானுக்கு அணு ஆயுதப் போர் நடத்தும் திட்டம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுமே மற்றொரு நாட்டுக்கு எதிராக அணு ஆயுதப் போர் நடத்தும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதை புரிய வைக்க எனக்கு சில மணி நேரம் தேவைப்பட்டது" என்று கூறியுள்ளார்.