பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயத்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே, பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அணி திரண்டு அரசுக்கு எதிராக போராடத் துவங்கி உள்ளனர். மின் கட்டணத்தை குறைப்பது உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் விவசாயச் சங்கத்தை சேர்ந்த 25000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராடி வருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் காரணமாக இஸ்லாமாபாத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே, பாகிஸ்தானில், இதுபோன்ற போராட்டங்கள் ஆங்காங்கே நடத்தப்பட்டு வந்தன. தற்போதைய விவசாயிகள் போராட்டம் அதன் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அவற்றுள் முக்கியமான சில கோரிக்கைகள் வருமாறு:
1. விவசாயத்திற்கான மின் கட்டணத்தை பழைய முறைக்கு மாற்ற வேண்டும். அதாவது, ஒரு யூனிட்டுக்கு 5.3 ரூபாய்களாக மாற்ற வேண்டும்.
2. கள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனை செய்வது 400% உயர்ந்துள்ளது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. கோதுமை விலை மூட்டை ஒன்றுக்கு 2400 ரூபாயாகவும், கரும்பு விலை மூட்டை ஒன்றுக்கு 280 ரூபாயாகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
4. வெள்ளங்கள் வடிவதற்கு கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும்.
5. விவசாயத்திற்கு தொழில் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை கட்டுப்படுத்த, காவல்துறையினர், இஸ்லாமாபாத் நகரில், சில முக்கிய சாலைப்போக்குவரத்துகளை முடக்கி உள்ளனர். அத்துடன், போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், "அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் காவல்துறையினர் அல்ல" என்று கூறி, போராட்டக்காரர்கள், காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.














