ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம் தொடர்பாக பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தான் தூதரகம் கடுமையாக விமர்சித்துள்ளது. பாகிஸ்தான் அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் மேற்கொண்டு, அதனை வேகமாக செயல்படுத்தி வருகிறது என்று தூதரகம் அறிக்கையில் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் சோதனை செய்யப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள். காவல்துறையினர் அவர்களுக்கு முறையான அறிவிப்பின்றி விசாரணை நடத்தி, நகரங்களை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கு எந்த தகவலும் பகிரப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். அத்துடன், 14.5 லட்சம் ஆப்கானியர்கள் ஐ.நா அகதிகள் ஆணையரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது.