கடலுக்கும் சங்ககாலத் தமிழருக்குமான உறவு மிகவும் நெருக்கமானது. இதற்குச் சான்றாகக் கடல் குறித்தும் மரக்கலம் குறித்தும் பலச் சொற்கள் தமிழ் மொழியில் வழங்கி வந்திருக்கின்றன. கடலைக் குறிப்பிடுவதற்குப் பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முந்நீர் என்பனப் போன்றச் சொற்களும்; கப்பலைக் குறிக்குமாறு ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, நாவாய், திமில், அம்பி, கட்டுமரம், வத்தை, வள்ளம், தெப்பம், ழங்கி, பட்டுவா, வங்கம், நீருர்தி, முதலியச் சொற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. மேலும், தமிழில் இருக்கும் "கட்டுமரம்", "நாவாய்" என்றச் சொற்களே ஆங்கிலத்தில் Catamaran, Navy என்று அதே பொருளில் அழைக்கப்படுகின்றன. எனவே, கடலைப் பற்றியப் புரிதலுக்கும், கப்பல் கட்டும் தொழில்நுட்பத்திற்கும் தமிழர்களே உலகிற்கு முன்னோடியாக இருந்துள்ளனர் என்பது விளங்குகிறது.
கடலில் கப்பலைச் செலுத்துவதற்கு, காற்றின் போக்கைப் பற்றிய அறிவும், துறைமுகங்கள் பற்றியத் தெளிவும் இருத்தல் அவசியம். தமிழர்கள் இவை இரண்டிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். இயற்கையாகவே தமிழகக் கடற்கரை அமைப்பு, துறைமுகங்களைக் கொண்டிருந்தாலும், தமிழர்கள் அதன் அறிவியலையும் நில அமைப்பையும் அறிந்து, கப்பல்களை நிறுத்தும் வகையில், துறைமுகங்களைப் பண்படுத்தி உருவாக்கி வைத்தனர். சங்ககாலத்தில் தொண்டி, காவிரிப்பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை, வஞ்சி, முசிறி, பூம்புகார் போன்றப் பலத் துறைமுகங்கள் இயங்கி வந்ததற்கு இலக்கியம் மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவையே தமிழரின் கடல் சார் தொழில்நுட்பத்திற்குச் சான்றாகின்றன.
ஒரு குறிப்பிட்டப் பருவத்தில், ஒரு குறிப்பிட்டத் திசையில் வீசுவது பருவக் காற்று எனப்படும். அவ்வாறானக் காற்றே பழைய காலத்தில் கடலில் பயணம் செய்ய உறுதுணையாக இருந்தது. காற்றின் போக்கைக் கணித்து, அதன் படி கப்பல்களை இயக்குவதில் தமிழர்கள் வல்லவர்களாக இருந்தனர். காற்றின் ரகசியத்தை அறிந்தத் தமிழர்கள், ஒரு குறிப்பிட்ட நாளில் பயணத்தை தொடங்கினால், எண்ணியபடி குறிப்பிட்ட இடத்தை, குறித்த நாளில் அடையலாம் என்ற அனுபவ அறிவுப் பெற்றுப் பயணம் செய்தனர் என்பதை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. உதாரணமாக, “கலங்கரை விளக்கம்” பற்றிய குறிப்புகள் பெருபாணாற்றுப்படையில் உள்ளன. மேலும், கரிகாலன், “நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளி தொழிலாண்ட உரவோன் உம்பல்” எனப் பாராட்டப்பட்டான். இதன் மூலம் காற்றின் போக்கையறிந்து கப்பலோட்டும் திறமை தமிழர்களிடம் பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது தெளிவாகிறது.
கி.மு. இருநூறாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த அறிஞர் ஆர்க்கிமிடீஸ் நீரில் கப்பல்கள் மிதக்கும் அறிவியலை எடுத்துரைத்தார். ஆனால், அவர் வாழ்ந்த அதே சமயத்தில், தமிழர்கள் அந்த அறிவியலைச் செயல்படுத்திக் கொண்டிருந்தனர். பின்வரும் இலக்கியச் சான்றுகள் இதை உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் கப்பல்கள் பெரும்பாலும் வணிகத்திற்காகவே இயக்கப்பட்டன. எனவே, கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றுவதற்கும் இயக்குவதற்கும், ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவரங்களைப் பயன்படுத்தினர். அவை "கழிமுகங்கள்" என்று அழைக்கப்பட்டன. முன்துறை என்பது கழிமுகங்களின் வெளிப்பகுதியில் காணப்படும் துறைமுகமாகும் என்பதை “முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்” என்னும் ஐங்குறுநூறு வரிகள் உணர்த்துகின்றன. இம்முன்துறையில் பொருட்களுடன் உள்ள எடைக் கூடியக் கப்பல்கள் நங்கூரமிட்டு பாய்மரத்தை மடக்கி வைத்திருக்கும் என்பதை “தூங்கு நாவாய், துவன்று இருக்கை” என்று பட்டினப்பாலை குறிக்கிறது. கப்பல்களிலிருந்து எடை அதிகமானப் பொருட்கள் இறக்கப்பட்டவுடன், கப்பல் தன் பாய்மரங்களை உயர்த்தி, நீரோட்டம் அதிகமாக இருக்கும் கழிமுகத்தின் உட்பகுதியான பெருந்துறைக்கு செல்லும் என்பதை “புறம் கூம்போடு மீம்பாய் கலையாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” என்ற வரிகள் குறிக்கின்றன. இவையனைத்தும், கப்பலின் எடை மற்றும் காற்றின் போக்கிற்கு ஏற்ப பாய்மரங்களை இயக்கும் விதம் பற்றித் தமிழரின் தொழில்நுட்ப அறிவைப் பறை சாற்றும் பாடல் வரிகளாகும்.
கப்பல் கட்டுவதிலும் தமிழர்கள் வல்லவர்களாக இருந்துள்ளனர். கப்பல் கட்டிய தச்சர் “கலம் புனர் கம்மியர்’ எனப்பட்டனர். தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் 18 வகையான கலங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. அவற்றை, கட்டுமர வகை, தோணி வகை, வள்ளம் வகை எனப் பாகுபடுத்தியுள்ளனர். கட்டுமர வகைக்கலங்கள் மீன்பிடித்தலுக்கும், புனல் விளையாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தெப்பம், மிதவை, புணை, பரிசல், ஆகியன தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கட்டுமரங்கள் ஆகும். கட்டுமரங்களின் போதிய பாதுகாப்பின்மையை கருத்தில் கொண்டு, தோணி, படகு, சோங்கு, ஓடம், முடுகு, கைப்பரிசு ஆகியவை உருவாக்கப்பட்டன. இவற்றை மீன்பிடிப்பதற்கும், புனல் விளையாட்டிற்கும், கடற்போருக்கும், முத்துக்குளித்தலுக்கும் பயன்படுத்தியதாக அகநானூறு, குறுந்தொகை மற்றும் புறநானூறு ஆகிய இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இவையனைத்தும் நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்றவையாக இல்லை என்பதால், பெரிய கலங்களை மரக்கலம், நாவாய், வங்கம், மதலை, கப்பல், அம்பி, திமில் போன்ற பெயர்களில் உருவாக்கினர். தமிழர் கப்பற்கலையில் சிறந்து விளங்கியதுடன் தொன்மையானவர்களாக இருந்துள்ளார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
தமிழரின் கப்பல் கலைக்குச் சான்றாக தொல்லியல் சான்றுகளும் கிடைத்துள்ளன. நாகைக் கடற்கரையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் அது ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் அதில் உள்ள எழுத்துக்கள் சங்கத்தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப்போகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே போல ஆஸ்திரேலியா கடல்பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் போது, மிகப்பெரிய சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் 2,500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், அது தமிழருடையது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், 1811ல், லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் “பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை." என்று வியந்து கூறியுள்ளதாக அறியப்படுகிறது. தமிழரின் தொழில்நுட்ப அறிவைப் போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை.