ரபா நகர் மீது இஸ்ரேல் படையெடுப்பதற்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவா காலாண்டுக்கு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கடிதம் எழுதி உள்ளனர். சுமார் 900 ராணுவ வீரர்களின் அன்னையர் அந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் கூறப்படுவதாவது, ரபா நகர் மீது இஸ்ரேல் படையெடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். அந்நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது மிகவும் கண்மூடித்தனமான செயலாகும். ரபா நகரில் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பல மாதங்களாக கூறி வருவதால் ஹமாஸ் படையினர் நிச்சயம் முழு ஆயத்த நிலையில் இருப்பார்கள். இந்நேரம் அவர்கள் ராணுவ வீரர்களை கொல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பார்கள். எனவே இந்த நகருக்குள் எங்கள் மகன்களை அனுப்புவது என்பது மரணப் போரில் சிக்க வைப்பது போன்றதாகும். இந்த போரால் எங்கள் மகன்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் களைத்து போய் உள்ளனர். அவர்களை ஆபத்தான பகுதிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது.
ரபா நகர் நெருக்கமான கட்டிடங்களும் சிக்கலான சுரங்கங்களும் கொண்ட இடமாகும். இது இஸ்ரேல் வீரர்களுக்கு ஆபத்து நிறைந்த போர்க்களமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதே சமயத்தில் ஹமாஸ் குழுவினர் இங்கு பெரிய அளவில் பதுங்கி இருக்கின்றனர் என்றும், அவர்களை ஒழித்தால்தான் இந்த போர் முடிவடையும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறி வருகிறார்.