மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் வயதான தம்பதியர் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவருக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு சற்று நேரம் காத்திருக்க வேண்டி இருந்ததால், அவர் நடந்து வந்து விட்டார். ஆனால், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு 80 வயதான அந்த பயணி உயிரிழந்துள்ளார். இதற்கு, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அலட்சியப் போக்கே முக்கிய காரணம் என சொல்லப்பட்டுள்ளது. ஏர் இந்தியா சார்பில், பயணியை காத்திருக்க சொன்னதாகவும், ஆனால் அதை கேட்காமால் அவர் நடந்து சென்று விட்டார் எனவும் கூறப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான போதிய வசதிகளை உடனுக்குடன் ஏற்படுத்தி தரவில்லை என குற்றம் சுமத்தி, டிஜிசிஏ அபராதம் விதித்துள்ளது.