பாவைக்கூத்து

June 21, 2022

தமிழர்கள், இயல், இசை, நாடகம் என்றுத் தமிழை மூவகைப் படுத்திக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றுள் இயலும் இசையும் கலந்த நாடகத் தமிழ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலைப் பற்றியச் சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்றுக் குறிப்பிடுகிறார். அத்தனைத் தொன்மையானத் தமிழர்களின் நாடகக் கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாவைக்கூத்து […]

தமிழர்கள், இயல், இசை, நாடகம் என்றுத் தமிழை மூவகைப் படுத்திக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றுள் இயலும் இசையும் கலந்த நாடகத் தமிழ் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் தமிழ் நாடகக்கலைப் பற்றியச் சான்றுகள் உள்ளன. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்றுக் குறிப்பிடுகிறார். அத்தனைத் தொன்மையானத் தமிழர்களின் நாடகக் கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பாவைக்கூத்து என்று அழைக்கப்படும் பொம்மலாட்டம் ஆகும்.

இன்றையத் திரைப்படங்களுக்கு இந்தப் பொம்மலாட்டமே முன்னோடியாக இருக்கிறது. தோல் பாவைக்கூத்து, மரப் பாவைக்கூத்து, என்றப் பெயர்களாலும், தோல் பொம்மலாட்டம், மரப் பொம்மலாட்டம் என்றப் பெயர்களாலும் இரண்டு வகையில் இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் பொம்மலாட்டா எனவும், கர்நாடகத்தில் கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் ராஜஸ்தானில் காத்புட்லி எனவும் மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பிற நாடுகளிலும் இந்தக் கலை வடிவம் காணப்படுகிறது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலுள்ள கிரேக்க இலக்கியங்களில் இந்தக் கலை குறிக்கப்பட்டுள்ளது. அதே போல, தமிழிலும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் உள்ள திருக்குறளில் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கயிறு உவமையாக சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இது மிக மிகத் தொன்மையானக் கலை என்பது தெளிவாகிறது.

"நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று"

என்றத் திருக்குறள், ‘பாவையாடல்’ தமிழர்களின் வழி வழி வந்த நிகழ்வாகவே இருந்துள்ளது என்பதை உறுதிப் படுத்துகிறது. இப்பாவையாடல், பொம்மைகளின் வடிவமைப்பி்னைக் கொண்டு, இரு நிலைகளில் காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றது. அவை, மரத்தாலான பொம்மைகளின் மூலம் கதை நிகழ்வுகளை நடத்திக் காட்டும் மரப்பாவைக் கூத்து மற்றும் தோலினால் செய்யப் பெற்ற பாவைகளின் நிழலை மையப்படுத்தி அமையும் தோல்பாவைக் கூத்து என்பனவாகும்.

மரப்பாவைக் கூத்துக்கானப் பொம்மைகள் பெரும்பாலும் குறைந்த எடையுள்ளக் கலியாண முருங்கை மரத்தாலேயே செய்யப்படுகின்றன. கதையின் பாத்திரங்களுக்கேற்ப பொம்மைக்கு, வண்ணம், ஆடை, ஆபரணங்கள் முதலிய ஒப்பனைகள் செய்யப்படுகின்றன. பொம்மைகளின் உயரம் பொதுவாக 1.5அடி முதல் 3அடி வரையிலும், எடை மூன்று முதல் பத்து கிலோ வரையிலும் இருக்கும். பொம்மையின் தலை, கை, கால், முதுகு ஆகியவற்றில் பிணைக்கப்பட்டுள்ளக் கயிறு ‘சுண்டுக் கயிறு’ எனப்படும். அதன் மற்றொரு முனை அரை அடி நீளமுள்ள மூங்கில் குச்சிகளில் கட்டப்பட்டு, பாவையாட்டிகள் (பாவைகளை இயக்குவோர்) இக்குச்சிகளைப் பிடித்துக் கயிறுகளை அசைக்க, பாவைகள் இயங்கத் தொடங்கும்.

தோல் பாவைக்கூத்தில், ஆடு அல்லது மானின் பதப்படுத்தப்பட்டத் தோலில் கதாப்பாத்திரங்களின் உருவங்கள் அழகிய ஒப்பனைகளுடன் வரையப்படும். இவ்வகை ஓவியப்பாவைகள் ஒளியினை ஊடுருவச் செய்யும்படி உருவாக்கப்படுகின்றன. குச்சியில் பொருத்தப்படும் இப்பாவைகள், பாவையாட்டியின் அசைவுகளுக்கேற்பத் திரையில் நிழல் வடிவங்களாக உருப்பெறும்.

பாவைக் கூத்துக்கான மேடை ‘கூத்தரங்க மேடை’ என்று அழைக்கப்படுகிறது. கதை நடத்தும் முறை, கடவுள் வாழ்த்து, நகைச்சுவைப் பகுதி மற்றும் கதைப்பகுதி என மூன்று நிலைகளில் அமைகிறது. பொதுவாக, பாவைகளை இயக்க நால்வர், இசைக்கருவிகளை இயக்க நால்வர், மற்றும் பொம்மைகளை எடுத்துக் கொடுக்க ஒருவர் என ஒன்பது பேர் கொண்ட குழுவால் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இதிகாசக் கதைகள், புராண நிகழ்வுகள், வரலாற்றுச் செய்திகள் ஆகியன பாவைக்கூத்தின் மூலம் கூறப் படுகின்றன.

சங்ககாலத்திலிருந்து அறியப்படும் இக்கலை, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வரையிலும் உன்னதமான நிலையில் இருந்தது. குறிப்பாக இந்தியச் சுதந்திரப் போராட்டச் சமயங்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக எளிய மக்களைப் போராட வைக்கும் பிரச்சார ஆயுதமாக இது திகழ்ந்தது. அதன் பிறகு, திரைப்படங்களின் வரவால் நலிவடைந்துள்ளது. பழமை வாய்ந்தக் கலைகளை அழிய விடாமல், அதே சமயத்தில் நாகரிகத்தையும் அரவணைத்துக் கொண்டு செல்வதுதான் மிகச் சிறந்தக் கலாச்சாரமாக இருக்க முடியும். அந்த வகையில், இன்றையக் காலத்தில், நிழற் கூத்து வடிவில், சுற்றுப்புறச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வுக் கலையாகத் தமிழர்களின் தொன்மையான நாடகக் கலை வடிவமானப் பாவைக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. இந்தக் கலையை நாமும் ஆதரிப்போம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu