பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வருகின்றன. இன்று, ஒரு வருட குறைவான பங்கு மதிப்பை பேடிஎம் பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து, மேலும் 7.7% சரிவை சந்தித்து, வரலாற்றுச் சரிவாக ஒரு பங்கு 440.35 ரூபாய்க்கு வர்த்தகமானது. இந்நிலையில், நிறுவனம் உடனடியாக மீண்டு எழுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். அத்துடன், நிறுவனத்தின் பங்கு மதிப்பு 350 மற்றும் 300 ரூபாய்க்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
புதன்கிழமை வர்த்தக நாளில், மொத்தம் 17.69 லட்சம் பேடிஎம் பங்குகள் கைமாறி உள்ளன. இதனால், 80.02 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 29361.31 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் உச்சபட்ச சந்தை மதிப்பு 1.2 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் பொது பங்கிட்டு முறைக்கு அறிமுகமான போது, அதன் பங்கு மதிப்பு 2150 ரூபாயாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இன்றைய பங்கு மதிப்பு 79.52% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.