ஹோலிப் பண்டிகை க்காக உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாக டெல்லி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லியின் புகழ்பெற்ற சதா பஜாரைச் சேர்ந்த வியாபாரி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் போலவே சந்தையின் அங்காடிகள் ஹோலி திருவிழாவை கொண்டாடுவதற்கான வண்ணப் பொடிகள், தெளிப்பான்கள் மற்றும் பிற அலங்காரப் பொருட்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், கடந்த ஆண்டு வரை சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஹோலிப் பொருட்களுக்கு மக்களிடையே அதிக ஆதரவு காணப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு உள்ளூர் ஹோலி தயாரிப்புகளை வாங்குவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது, மத்திய அரசு முன்னெடுத்த தற்சார்பு இந்தியா திட்ட முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் ஹோலிப்பண்டிகையின்போது நுகர்வோர்கள் சீன தயாரிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஹோலி கொண்டாட்ட பொருட்களுக்கான தரம் மற்றும் வடிவமைப்பு நுகர்வோரை கவரும் வகையில் இருப்பது உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது என்று அவர் கூறினார்.














