ஸ்பெயின் நாட்டு மக்கள் தங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வெளியேறச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு வருவதால், விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
நிகழாண்டில் மட்டும் இதுவரை 3.3 கோடி சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் களமிறங்கினர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தண்ணீரை பீச்சி அடித்து கோஷங்கள் எழுப்பினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வீடுகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது எனவும், பல வீடுகள் சுற்றுலா பயணிகளுக்கான தற்காலிக விருந்தினர் இல்லங்களாக மாற்றப்படுகிறது எனவும், பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக, பல பொருட்களின் விலைகளும் உயர்ந்து வருவதாக கூறுகின்றனர்.