'பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் நாடு தழுவிய சோதனையை அமலாக்கத்துறை சமீபத்தில் மேற்கொண்டது. அப்போது, 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த அமைப்பு தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, பி.எப்.ஐ., அமைப்புக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகள் தடை விதித்தது.
இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளை பி.எப்.ஐ., அமைப்பு உருவாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.