பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை உலகின் துடிப்பான எரிமலைகளுள் ஒன்றாகும். இது அல்பே மாகாணம் லெகாஸ்பி நகருக்கு அருகே அமைந்துள்ளது. இந்த எரிமலை தற்போது சீற்றமடைய தொடங்கியுள்ளது. மேலும், இது எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய நிலையில், மேயான் எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. எனவே, எரிமலையை சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வசித்து வரும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில், கிட்டத்தட்ட 12600 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனினும், ஆயிரக்கணக்கானோர் அதே பகுதியில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். இந்த எரிமலை துடிப்பான எரிமலை என்பதால், ‘நிரந்தர எரிமலை வெடிப்பு அபாய பகுதி’ என்று சில பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை, மக்கள் வசிப்பதற்கு தகுதி வாய்ந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அந்த இடத்தை விட்டு வெளியேற மறுப்பதாகவும் கூறப்படுகிறது.














