பிலிப்ஸ் நிறுவனத்தில் 6000 பேர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, பிலிப்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு 105 மில்லியன் யூரோக்களாக பதிவாகியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டில் 1.6 பில்லியன் யூரோக்கள் நஷ்டத்தை பிலிப்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட 'தூக்கத்தில் மூச்சு விடுதல்' தொடர்பான கருவியில் ஏற்பட்ட குறைபாடுகளால் அதனை திரும்ப பெற்றது. இதன் காரணமாகவே, நிறுவனத்திற்கு பெருவாரியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராய் ஜேக்கப்ஸ், "2022 ஆம் ஆண்டு, பிலிப்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் கடினமானதாக அமைந்தது. பணி நீக்கத்தை தவிர்ப்பதற்கு வேறு வழிகள் இல்லை. ஏற்கனவே, 4000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2025க்குள் கூடுதலாக 6000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவர். அதில் 3000 பேர் 2023 ல் பணிநீக்கம் செய்யப்படுவர்" என கூறியுள்ளார்.














