இந்தியாவைச் சேர்ந்த டிஜிட்டல் முறை நிதி நிறுவனமான போன் பே, எல்லை தாண்டிய யுபிஐ பரிவர்த்தனை முறையை தொடங்கியுள்ளது. யுபிஐ இன்டர்நேஷனல் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய வங்கி கணக்குகளில் இருந்து வெளிநாடுகளுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரிசியஸ், நேபால் மற்றும் பூட்டான் நாடுகளுக்கு பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் அல்லது ஃபாரக்ஸ் கார்டு வழியாக மட்டுமே பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்வதை போலவே, போன் பே தளம் மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய போன் பே நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ராகுல் சாரி, "யுபிஐ இன்டர்நேஷனல் திட்டத்தில் இது முக்கிய படிக்கல் ஆகும். இந்தியர்களின் வெளிநாட்டு பரிவர்த்தனையில் இது திருப்பு முனையாக இருக்கும்" என்று கூறினார்.