போன் பே நிறுவனத்தின் வருவாய் 138% உயர்வு

October 19, 2022

வால்மார்ட்டுக்கு சொந்தமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான போன் பே, தனது வருவாய் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நிறுவனத்தின் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருவதும், இழப்பு மதிப்பு படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு செலவுகளை குறைத்தல், தானியங்கி முறையில் பணியாற்றுதல் மற்றும் சாதகமான பொருட்களை கையாளுதல் போன்ற புதுமையான உத்திகளை செயல்படுத்தியதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2020ம் நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 371.7 கோடி […]

வால்மார்ட்டுக்கு சொந்தமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான போன் பே, தனது வருவாய் உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, நிறுவனத்தின் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருவதும், இழப்பு மதிப்பு படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு செலவுகளை குறைத்தல், தானியங்கி முறையில் பணியாற்றுதல் மற்றும் சாதகமான பொருட்களை கையாளுதல் போன்ற புதுமையான உத்திகளை செயல்படுத்தியதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் நிதியாண்டில், நிறுவனத்தின் வருவாய் 371.7 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே, 2021ம் நிதியாண்டில், 690 கோடியாக உயர்ந்து, 2022 ஆம் நிதி ஆண்டில், 1646 கோடியாக பதிவாகி உள்ளது. இதன் மூலம், வருடாந்திர அடிப்படையில் 138% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நஷ்டம், கடந்த 2020 ஆம் நிதி ஆண்டில், 1566 கோடியாக பதிவானது. இது, 2021ம் நிதி ஆண்டில், 886 கோடியாக குறைந்து, 2022 ஆம் நிதி ஆண்டில், 827 கோடியாக பதிவாகி உள்ளது.

அதே வேளையில், நிறுவனம் ஒரே காலகட்டத்தில் பல துறைகளில் விரிவாக்க நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. இதற்காக, அதிகமான பணியாளர்களை புதிதாக பணியமர்த்தியுள்ளது. இதனால், பணியாளர்களுக்கான செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் பணியாளர் செலவுகள் 41% அதிகரித்து, 551 கோடியாக பதிவாகியுள்ளது.

மேலும், நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அதிக விளம்பரம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் இந்த நிறுவனத்திற்கு பெரும் பொருட் செலவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. எனவே, விளம்பரத்திற்கான செலவுகளும் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2022 ஆம் நிதி ஆண்டில், விளம்பரச் செலவுகள் 62% அதிகரித்து, 866 கோடியாக பதிவாகி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த போன் பே நிறுவனம், தனது அனைத்து செயல்பாடுகளுக்கும் தலைமையகமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தது. அதன் பின்னர், நிறுவனத்தின் வருவாய் உயர்வு குறித்த அறிக்கை வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் நிறுவனம் கையகப்படுத்தியதன் பின்னர், வால்மார்ட் நிறுவனத்தின் கீழ், போன் பே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தனித்த ஸ்தாபனமாக செயல்பட போன் பே விண்ணப்பித்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu