பினாகா ராக்கெட் ஏவும் அமைப்புகளை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10,147 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதற்காக, எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ் லிமிடெட் (EEL) மற்றும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (MIL) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சக்தி மென்பொருள் மேம்பாட்டிற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் இந்திய ராணுவத்திற்கான துல்லியமான மற்றும் நீண்ட தூர தாக்குதல்களை மேம்படுத்த உதவும். பினாகா ராக்கெட் அமைப்புகளின் தாக்குதல்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை மேலும் பலப்படுத்தப்படும். பாதுகாப்புத் துறையின் முழுமையான முன்னேற்றத்திற்காக இந்த ஒப்பந்தங்கள் முக்கியமானவை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.