சென்னையில் அண்ணா நகர், டி நகர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பெருநகர பகுதிகளில் புதிய போக்குவரத்து திட்டமான லைட் மெட்ரோ அமைப்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கருத்தை மையமாகக் கொண்டு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகம் இதனை திட்டமிட்டுள்ளது.
இந்த லைட் மெட்ரோ என்பது ஆங்கிலேயர் காலத்தில் மதராஸ் மாகாணத்தில் இயக்கப்பட்ட டிராம் வண்டிகளின் நவீன வடிவம் ஆகும். இவை சுரங்கம் மற்றும் உயர்மட்ட பாதை இல்லாமல் சாலையிலேயே செல்லும் வகையில் அமைக்கப்படும். இவை சாலைகளின் ஓரத்தில் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்து மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மெட்ரோ திட்டங்களை விட இதன் மூலதன செலவும் குறைவாகவே இருக்கும். மேலும் இதில் போக்குவரத்து பயன்பாடு, வாகனம் நிறுத்த வசதிகள், நடைபாதை வசதி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணி தொடங்கியுள்ளது.