புதுடெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருகை தந்திருந்தார். மாநாடு நிறைவடைந்த நிலையில், தனது குழுவினருடன் நேற்று இரவு அவர் நாடு திரும்பவதாக இருந்தது. ஆனால், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவே, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, அவர் இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு பயணம் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என அவரது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஜி 20 மாநாடு நடைபெற்ற போது, கனடாவில் இந்திய விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்திருந்தார். தீவிரவாத இயக்கங்கள் மூலம், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் கனடாவில் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு, “கனடாவில் நடைபெறும் வன்முறைகளும் விரோதங்களும் விரைவில் தடுக்கப்படும். மேலும். ஒரு சிலர் செய்யும் நடவடிக்கைகள் கனடாவின் மொத்த அடையாளமாக மாற்றப்படக் கூடாது” என ஜஸ்டின் ட்ரூடோ பதில் தந்திருந்தார். இது நடைபெற்ற சில மணி நேரங்களில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பயணம் ரத்தாகி, அவர் இந்தியாவில் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.














