இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதநேய உதவிகள் தேவைப்படும் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்க ஆரோக்கிய மைத்ரி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தெற்குலக நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர், “கொரோனா பரவலின் போது இந்தியாவின் வேக்சின் மைத்ரி என்ற திட்டம் மூலம் நூற்றுக்கும் அதிகமான உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. தற்போது, அதன் தொடர்ச்சியாக, ஆரோக்கிய மைத்ரி திட்டம் தொடங்கப்படுகிறது” என்று கூறினார். அத்துடன், உலகளாவிய முறையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டத்தை தொடங்குவதாக கூறினார். இதன் மூலம், வளரும் நாடுகளில் உள்ள மாணவர்கள் ஸ்காலர்ஷிப் மூலம் இந்தியாவில் கல்வி பயில வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார். மேலும், இந்தியா, அறிவியல் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் பன்மடங்கு முன்னேற்றம் அடைந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்தியாவின் இந்த தொழில்நுட்பங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.