ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் இன்று தொடங்கவுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 8 நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் இந்த மாநாடுகள் நடைபெற்றன. இந்நிலையில் இந்தியா, ரஷ்யா ஆகிய 2 நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்பாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அதிகாரி யூரி உஷாகோவ் கூறுகையில், “இரு நாட்டு தலைவர்களும் 2 நாடுகளிடையிலான உறவுகளை மேம்படுத்துதல், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வரும் டிசம்பரிலும், 2023-ல்ஜி20 மாநாட்டுக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கும் இந்தியா தலைமை வகிக்கவுள்ளது. எனவே 2 நாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது", என்றார்.
மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் திட்டம் இல்லை என்று தெரியவந்துள்ளது.