டெல்லி முதல் மும்பை வரையில், சுமார் 1386 கிலோமீட்டர் தூரத்திற்கு, எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் சாலையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த சாலை மூலம் டெல்லி மற்றும் மும்பை இடையிலான பயண தூரம் 12% குறையும் எனவும், பயண நேரம் 50% குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்லி - மும்பை பயணம், 1242 கிலோமீட்டர் தொலைவில், 12 மணி நேரத்தில் செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சாலையின் முதல் கட்ட பிரிவை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவக்கி வைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டெல்லி - தாசா - லால்சாட் பிரிவில், எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. சுமார் 12150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட இந்த 246 கிலோமீட்டர் தொலைவிலான எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் திறந்து வைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், 18100 கோடிக்கும் அதிகமான தொகையில் கட்டமைக்கப்படும் சாலை விரிவாக்கத் திட்டங்களை அவர் தொடக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அவர் கர்நாடகாவில் நடைபெறவுள்ள விமான கண்காட்சியை தொடங்கி வைக்க செல்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.