பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி, 99, குஜராத் மாநிலம் ராய்சன் கிராமத்தில், தன் இளைய மகன் பங்கஜ் மோடி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆமதாபாதில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஹீரா பென்னுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3.39 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காந்திநகரில் உள்ள அவரது தாயார் இல்லத்திற்கு வந்த பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தாயார் உடலை தோளில் சுமந்து சென்று வேனில் ஏற்றினார். பின்னர் மயானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் காலை 9.35 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது.