வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கும் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடையை நீடித்தது.
இதுகுறித்து திருநெல்வேலி எஸ்.பி. மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இச்சேவைக்கான கட்டணத்தை வங்கி நிர்வாகம் அரசு கருவூலத்தில் செலுத்தும். இதற்கு ஜி.எஸ்.டி.,செலுத்த திருநெல்வேலி ஜி.எஸ்.டி.,உதவி கமிஷனர் நோட்டீஸ் அனுப்பினார். போலீசார் வணிக நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பு அளிப்பதில் போலீசார் சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்றுகின்றனர். இதுபோல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படும் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரின் பாதுகாப்பு பணிக்குரிய கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி., விதித்த நோட்டீசிற்கு எதிராக மதுரை ஜி.எஸ்.டி.,கமிஷனரிடம் மேல்முறையீடு செய்தோம். அவர் அபராதத்தை ரத்து செய்து, வரியை செலுத்த உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'ஜி.எஸ்.டி.,கமிஷனரின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி உதவி கமிஷனர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது,' என்றார். இதையடுத்து இந்த வழக்கு நேற்று நீதிபதி முகமது சபீக் விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. பின்னர் நீதிபதி, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு அக்.,11 வரை நீட்டிக்கப்படுகிறது என்றார்.














