அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத்தொகை" வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.