2026 ஏப்ரல் 1 முதல் சமூக வலைதள கணக்குகள், மின்னஞ்சல் உள்ளிட்டவை வருமான வரித்துறையின் கீழ் ஆய்வு செய்யப்பட உள்ளது.
2025 ஆம் ஆண்டு வருமான வரி சட்ட திருத்தத்தின்படி, வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்டவை எந்த முன்னறிவிப்பும் இன்றி வருமான வரித்துறையால் ஆய்வு செய்ய முடியும். சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மூலமாக, அரசாங்கம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களின் டிஜிட்டல் நிதி தொடர்பான தளங்களை சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய முடியும். கணக்கில் வராத வருமானம், ரொக்கப் பணம், தங்கம், நகைகள், விலை உயர்ந்த சொத்துக்கள் தொடர்பாக சந்தேகம் எழுமிடத்து, அவர்களின் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், வங்கி கணக்குகள், ஆன்லைன் முதலீட்டு கணக்குகள், வர்த்தக கணக்குகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
தற்போது உள்ள வருமான வரி சட்டம் 1961-இன் 132-வது பிரிவின்படி, கணக்கில் வராத சொத்துக்கள் இருந்தால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்யலாம். புதிய திருத்த சட்டமாகும் பட்சத்தில், அதிகாரிகள் டிஜிட்டல் தரவுகளையும் கைப்பற்ற முடியும். இதில் கணினி சாதனங்கள், இணையதளம், கம்ப்யூட்டர் தரவுகள், சைபர்-ஸ்பேஸ், வொர்ல்டுவைடு வெப் உள்ளிட்டவை விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸாக கருதப்படும். இந்த மசோதாவின் கீழ், மூத்த வரித்துறை அதிகாரிகள், இணை மற்றும் கூடுதல் இயக்குநர்கள், துணை மற்றும் பொறுப்பு ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளலாம்.